ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது அந்நாட்டு அரசுக்கு எதிரான தீவிர கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “உதவி வந்து கொண்டிருக்கிறது” என்றும், போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உண்டு என்றும் பதிவிட்டிருந்தார்.

ஆனால் டிரம்பின் இந்த வார்த்தைகளை ஒரு பாதுகாப்பு அரணாக நம்பி, பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் துணிச்சலுடன் வீதிகளில் இறங்கிப் போராடினர். ஈரான் அரசு தனது ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியபோது, டிரம்ப் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஈரான் அரசு கொலைகளை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதால் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிடாது என அறிவித்தார்.

அதிபர் டிரம்பின் இந்தத் திடீர் பின்வாங்கல் ஈரானிய போராட்டக்காரர்களிடையே பெரும் ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “டிரம்ப் எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு, இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டார்” என்று தெஹ்ரான் நகரைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் டிரம்பின் வெற்று வாக்குறுதிகளை நம்பி வீதிக்கு வந்ததாலேயே இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த மரணங்களுக்கு டிரம்பே முழுப் பொறுப்பு என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஈரானிய அதிகாரிகள் சிலரின் மரண தண்டனையை ரத்து செய்ததை டிரம்ப் பாராட்டியுள்ள நிலையில், தங்களை ஆபத்தான சூழலில் கைவிட்ட டிரம்பை ஒரு “துரோகி” என ஈரான் மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடி வருகின்றனர்.