அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ உறுப்பினராக சேர 1 பில்லியன் டாலர் (சுமார் ₹9,087 கோடி) கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற விரும்பும் நாடுகள் ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளுக்கு 3 ஆண்டு கால உறுப்பினர் அந்தஸ்து மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. காசாவை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்டக் குழுவில் சேர இவ்வளவு பெரிய தொகை கோரப்படுவது சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. “அமைதி வாரியத்தில் சேர குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணம் என எதுவுமில்லை” என்று தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, பரவி வரும் செய்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.

இந்த அமைதி, பாதுகாப்பு மற்றும் பிராந்திய செழிப்புக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நட்பு நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், காசா மறுசீரமைப்பு நிதிக்காக நாடுகள் தாமாக முன்வந்து வழங்கும் பங்களிப்புகள் வரவேற்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் தலைமையிலான இந்த வாரியத்தில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.