பொங்கல் என்றாலே புத்தாடைகள், பொங்கல் பரிசு, சொந்த ஊர்களுக்கு பயணம், பாரம்பரிய கலை நிகழ்ச்சி என தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கலைக்கட்டி இருக்கும். ஆனால் பொங்கல் பண்டிகைக்கான எந்த சுவடும் இல்லாமல் எப்பொழுதும் போல மிக சாதாரமாக இருக்கும் ஒரு கிராமம். காரணம் அந்த கிராமத்தில் கடந்த பல தலைமுறைகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சிங்கிலிபட்டி என்ற கிராமம். இந்த கிராமம் தான் பொங்கல் பண்டிகைக்கான அறிகுறி எதுமின்று வெறிச்சோடி காணப்படுகிறது.

இதற்கு விநோதமான ஒரு காரணமும் உண்டு. ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒரு பொங்கல் பண்டிகையின் போது சாமிக்கு படையல் வைத்த பொங்கல் நாய் ஒன்று தின்று விட்டதாகவும், இந்த சம்பவம் அபசகுணமாகவும் கருதப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது கால்நடைகள் அடுத்தடுத்து உயிரிழந்தாம். இதனை தொடர்ந்து தான் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கைவிடப்பட்டதாம். இந்நிலையில் இதுபோன்ற ஒரு நூற்றாண்டு நம்பிக்கையை கைவிட்டு தமிழர்களின் பாரம்பரிய விழாவை கொண்டாட முன் வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.