சென்னையில் உள்ள மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்திலிருந்து சரக்குகளை இறக்கி விட்டு டிரைலர் லாரி ஒன்று வடசென்னை வழியாக வந்து கொண்டிருந்தது.
இந்த டிரைலர் லாரியை எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இந்த டிரைலர்  லாரி பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தில் சென்றபோது, அதற்கு முன்னால் சிலிண்டர்களை ஏற்றிகொண்டு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் அதன் பின்னால் சென்று கொண்டிருந்த ரஃபீக், அந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக இடதுபுறமாக லாரியை திருப்பி உள்ளார்.

இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த டிரைலர் லாரியானது மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு பாய்ந்துள்ளது. இதனால்  லாரியின்  முன்பகுதியானது பாலத்திலிருந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. உடனே இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் அத்திப்பட்டு வட சென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கிய லாரியில் சிக்கித் தவித்த டிரைவர் ரஃபிக்கை  ராட்சத ஏணியை கொண்டு பத்திரமாக மீட்டனர். இதன் பின்   அந்தரத்தில் தொங்கிய லாரியையும் கிரேன் மூலம் சேதாரம் இல்லாமல் மீட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.