திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்கள் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக புகாரளிக்கப்பட்ட கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, சிராஜுக்கும் திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமூக ஊடக வழியாக பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், இருவரும் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பில் இருந்தனர். சில காலத்துக்குப் பிறகு, அந்த இளம்பெண் தொடர்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிராஜ், வாட்ஸ்-அப் உரையாடல்களை வெளியிடுவதாக மிரட்டி, தொடர்ந்து பாலியல் தொல்லை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், திருச்சூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிராஜை வலைவீசி தேடிய நிலையில், திருச்சூர் கோர்ட்டு அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது.

மேலும் சமீபத்தில், எர்ணாகுளம் நகரில் உள்ள ஒரு விடுதியில் சிராஜ் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர், இரிஞ்சாலக்குடா முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிராஜ், நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.