கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே பகுதியில் கள்ளக்காதலின் பின்னணியில் ஏற்பட்ட தகராறில், மது போதையில் காதலியை அரிவாளால் வெட்டிக் கொன்ற ஷாக் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபண்டே நகரசபையின் 8-வது வார்டு பகுதியில் வசித்து வந்தவர் பாபாஜான் (வயது 40). இவருக்கு மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். இதேபோல், கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரைச் சேர்ந்த ரமிஜாபி (வயது 25) என்பவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு பாபாஜான் மற்றும் ரமிஜாபி இடையே பழக்கம் உருவாகி, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகத் தெரியவந்தது. இது இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கண்டித்ததை அடுத்து, பாபாஜான் தனது குடும்பத்தையும், ரமிஜாபி தனது கணவரையும் விட்டு விலகி, குடிபண்டே நகரில் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர்.
இருவருக்கும் மதுவுக்கு அதீத பழக்கம் இருந்ததால், அடிக்கடி வீட்டிலேயே ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் நிலை காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை, வழக்கம்போல் இருவரும் மது அருந்தியபோது, ரமிஜாபி மேலும் மது கேட்டு, பாபாஜானிடம் அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த பாபாஜான், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, ரமிஜாபி மீது தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த குடிபண்டே போலீசார், ரமிஜாபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மதுபான போதையில் ஏற்பட்ட தகராறின் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பாபாஜான் கைது செய்யப்பட்டு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
