புது தில்லி: தேர்தல் முறைகேடுகளை குற்றம் சாட்டும் நோக்கில் “வாக்கு திருட்டு ” (வோட் சோரி”) போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய சொற்றொடர்கள், இந்திய வாக்காளர்களின் கண்ணியத்தையும், தேர்தல் அதிகாரிகளின் நேர்மையையும் தாக்கும் வகையில் உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
ஆணையம் தெரிவித்ததாவது, 1951-52 முதல் இந்திய பொதுத் தேர்தல்களில் “ஒரு நபர் – ஒரு வாக்கு” என்ற கொள்கை உறுதியாக நடைமுறையில் உள்ளது. போலி வாக்கு குறித்த குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்படக் கூடாது என்றும், யாராவது இரண்டு முறை வாக்களித்ததாக சான்றுகள் இருந்தால், எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
“வாக்கு திருட்டு” போன்ற மோசமான சொற்கள், கோடிக்கணக்கான வாக்காளர்களின் நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு உட்படுத்துவதோடு, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தவறான கதைகளை உருவாக்கும் முயற்சிகள் ஏற்க முடியாதவை” என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த எச்சரிக்கை, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வந்துள்ளது. அவர், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் பாஜக “வாக்குகளை திருடுகிறது” என்றும் குற்றம் சாட்டியிருந்தார். கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் “பெருமளவில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது” என அவர் கூறினார்.
ஆனால், தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது என முன்பே நிராகரித்திருந்தது. காங்கிரஸ் தலைவர் தரவுகளை பகிர்ந்ததாக கூறினாலும், பிரமாணப் பத்திரம் இன்றி குற்றச்சாட்டுகள் ஏற்கப்படமாட்டாது என ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
