தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் விசிலடித்ததால் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கடும் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதை முறைப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல் படை  வீரர் ஒருவர் தொடர்ந்து விசிலை ஊதிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், அமைதியாக இருக்க வேண்டிய வாக்குச்சாவடி வளாகத்தில் இப்படி இடைவிடாமல் விசில் சத்தம் எழுப்புவது வாக்காளர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இது தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குவதாகவும் கூறி அந்த வீரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஊர்க்காவல் படை வீரரின் இந்தச் செயலால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற முன்னாள் எம்.எல்.ஏ, இது ஒரு அரசியல் கட்சியின் சின்னம் என்று சத்தமிட்டார். இதனால் அங்கிருந்த கட்சி முகவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நிலைமை கைமீறிச் செல்வதைக் கண்ட அங்கிருந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டனர். இந்தச் சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் சுமார் 15 நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது. சாதாரண ஒரு விசில் சத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை இவ்வளவு கோபமடையச் செய்தது, அங்கிருந்த வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.