தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பொதுவாக உற்சாக மிகுதியில் பல வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், இது தேர்தல் விதிமுறைப்படி மிகப்பெரிய குற்றமாகும். வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறி யாராவது வாக்குச்சாவடிக்குள் படம் பிடித்தால், அவர்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
வாக்களிப்பதன் ரகசியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகக் கடமையை ஆற்றச் செல்லும் வாக்காளர்கள், தங்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தேர்தல் விதிகளை மதித்து நடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தடையை மீறி பதிவிடப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
