தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருகிறது. இந்த அதீத வெப்பம் காரணமாக கோடைகால நோய்கள் மற்றும் ‘வெப்பவாதம்’ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உடல் வெப்பம் அதிகரிக்கும் போது பலரும் செய்யும் ஒரு ஆபத்தான தவறு குறித்து பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தால் உடல் சோர்வோ அல்லது காய்ச்சல் போன்ற உணர்வோ ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின்றி பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பவாதம் என்பது சாதாரண காய்ச்சல் கிடையாது என்பதால், இத்தகைய மருந்துகளை உட்கொள்வது தற்காலிகமாக வெப்பத்தைக் குறைப்பது போலத் தெரிந்தாலும், அது உடலில் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

வெப்பத்தால் யாராவது மயக்கம் அடைந்தால், அவர்களை காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து, ஈரத்துணியால் உடலைத் துடைத்து குளிர்விக்க வேண்டும். மேலும் இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களைக் கொடுத்து உடல் வெப்பத்தை சீராக்க முயல வேண்டுமே தவிர, சுய மருத்துவம் செய்யக்கூடாது. குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.