ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஸ்ரீ பத்தரியா-லாத்தி ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், ரயில் மோதி 6 ஒட்டகங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. திங்கள்கிழமை காலை ஒட்டகங்கள் கூட்டமாக தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திலேயே ஒட்டகங்களின் உடல் சிதறிக்கிடந்த அந்த பயங்கரமான காட்சி, உள்ளூர் மக்களையும் கால்நடை உரிமையாளர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

இதனால் இப்பகுதியில் ரயில்வே தண்டவாளத்தைச் சுற்றி முறையான பாதுகாப்பு வேலி இல்லாததே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என்றும், உயிரிழந்த ஒட்டகங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகள் மற்றும் ஒட்டகங்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் ரயில்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் ரயில்வே நிர்வாகத்திற்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.