தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்காகப் படையெடுக்கும் மத்திய பாஜக அமைச்சர்கள் மற்றும் பாஜக முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில நேரடி சவால்களை விடுத்துள்ளார். குறிப்பாக, “தமிழக மண்ணில் நின்று கொண்டு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று தைரியமாக உங்களால் பிரசாரம் செய்ய முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் மொழி உணர்வைத் தொட்டு அவர் எழுப்பியுள்ள இந்தக் கேள்வி, தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நிதி ஒதுக்கீடு விவகாரத்திலும் பாஜகவை ஒரு கை பார்த்துள்ளார் முதலமைச்சர். “தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதி எவ்வளவு? அதேசமயம் பாஜக ஆளும் ‘செல்லக்குழந்தை’ மாநிலங்களுக்கு வாரி வழங்கப்படுவது எவ்வளவு? இதை மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?” என அவர் சாடியுள்ளார். வரி வருவாயில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை முன்வைத்து, பாஜகவின் ‘இரட்டை வேடத்தை’ மக்கள் முன் தோல் உரித்துக் காட்டப்போவதாக அவர் தனது பதிவில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
