தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய், தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிர வைக்கும் குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரம்பூர் மனுவில் தனது வயது 52 எனக் குறிப்பிட்டுள்ள விஜய், திருச்சி கிழக்கு மனுவில் 51 எனப் பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, பெரம்பூர் பிரமாணப் பத்திரத்தில் தன் மீது வழக்குகள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டவர், திருச்சி மனுவில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்களை இணைத்துள்ளார். சொத்து மதிப்பிலும் இரண்டு தொகுதிகளுக்கும் இடையே பல கோடி ரூபாய் வித்தியாசம் இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால் த.வெ.க வேட்பாளர்கள் பலரும் வேட்புமனு மற்றும் பிரமாணப் பத்திரங்களைச் சரியாக நிரப்பத் தெரியாமல் திணறி வருவதாகத் தெரிகிறது. ஒரு தொகுதியில் மனைவியின் பெயரில் உள்ள சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுவிட்டு, மற்றொரு தொகுதியில் அதைக் குறிப்பிடத் தவறியது போன்ற தவறுகளால், விஜய்யின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் நிர்வாகிகள் உள்ளனர்.
இதையறிந்த விஜய், பிழைகளைத் திருத்தி புதிய மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்த ஆரம்பக்கட்ட சொதப்பல்கள், ஒரு கட்சியின் தலைவருக்கே இந்த நிலையென்றால் மற்ற வேட்பாளர்களின் கதி என்ன? என்ற கேள்வியையும், த.வெ.க-வின் அரசியல் முதிர்ச்சியின்மை குறித்த விமர்சனங்களையும் வலுவாக எழுப்பியுள்ளது.
