சேலத்தில் வாடகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி, அவரது வளர்ப்புத் தந்தையாலேயே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மனைவி உஷா (43). உஷாவின் முதல் கணவருக்குப் பிறந்த மகள் வர்ஷினி (22). வரதராஜன் உஷாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, வர்ஷினியைத் தனது சொந்த மகளாகவே கருதி வளர்த்து வந்தார். அவரைச் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி படிக்க வைத்தார்.
இறுதி ஆண்டு சித்த மருத்துவ மாணவியான வர்ஷினிக்கும், நெல்லை விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வயதுக்கு மீறிய இந்தத் தொடர்பை வரதராஜன் மற்றும் உஷா கடுமையாக எதிர்த்தனர். பலமுறை புத்திமதி சொல்லியும் வர்ஷினி அதைக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வர்ஷினி தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள் பெற்றோருக்குக் கிடைத்தன. இதனால் ஆத்திரமும் வேதனையும் அடைந்த வரதராஜன், கடந்த 5-ம் தேதி சேலம் வந்து மகளை ஊருக்கு அழைத்துச் சென்றார். ஆனால், வழியிலேயே தகராறு செய்த வர்ஷினி மீண்டும் சேலத்திற்குத் தப்பி வந்துவிட்டார்.
மகள் தனது பேச்சைக் கேட்காமல் ஒரு திருமணமான நபருடன் செல்வதை கௌரவப் பிரச்சினையாகக் கருதிய வரதராஜன், அன்று மாலையே மீண்டும் சேலம் வந்து வர்ஷினியைச் சந்தித்தார். அப்போதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற வரதராஜன், வர்ஷினியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுத் தப்பியோடினார்.
தகவலறிந்து வந்தபோலீசார், வர்ஷினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உறுதியான நிலையில், தலைமறைவாக உள்ள வரதராஜனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் “கண்ணும் கருத்துமாக வளர்த்த மகளை, தவறான பாதைக்குச் சென்றதால் தந்தையே கொலை செய்த சம்பவம்” அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
