தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தற்போதைக்கு வலுவாக உள்ளது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி பேசுவதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. அந்த கட்சியில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரங்களில் தங்களுக்குத் தேவையான இடங்களைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் கையாளும் ஒரு யுக்தியாகவே இதைப் பார்க்க வேண்டும்.
தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணி பலமாகவே நீடிக்கிறது. வரவிருக்கும் தேர்தலை தமிழகம் நான்கு அணிகளாகச் சந்திக்க உள்ளது. அதே வேளையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தமிழகத்தில் சில அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகளின் துணையோடு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இது இன்னும் தொடர்வது வருத்தமளிக்கிறது. தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, மணல் கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
