கேரள மாநிலம் வர்க்கலா அருகே தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ மீது வந்தே பாரத் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்துக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் கைது செய்தனர்.
காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்தே பாரத் ரயில் சென்றுகொண்டிருந்தது. வர்க்கலா அருகே வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது,
தண்டவாளத்தின் குறுக்கே ஆட்டோ ஒன்று நிற்பதை லோகோ பைலட் கவனித்தார். உடனடியாக அவசர கால பிரேக்கை இயக்கி ரயிலின் வேகத்தைக் குறைத்தபோதிலும், ரயில் அந்த ஆட்டோவின் மீது பலமாக மோதியது.
இதில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியதுடன், ரயிலின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தின்போது ஆட்டோ ஓட்டுநரான சிபி (28) என்பவர் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் தப்பி ஓடினார். ஆட்டோ தண்டவாளத்தில் சிக்கியதால் வந்தே பாரத் ரயில் சுமார் ஒரு மணி நேரம் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆட்டோவை அகற்றிய பின் ரயில் புறப்பட்டுச் சென்றது. தலைமறைவாக இருந்த ஓட்டுநர் சிபியை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்து பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளப் பகுதிக்குள் இறக்கியது தெரியவந்தது. லோகோ பைலட்டின் துரித செயல்பாட்டால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
