ஹரியானா மாநிலம் குருகிராமில், தன்னுடன் வசித்து வந்த 19 வயது இளம்பெண்ணின் உடலில் சானிடைசர் ஊற்றி தீ வைத்தும், கத்தியால் குத்தியும் சித்ரவதை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதாவது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், குருகிராமில் வசித்து வருகிறார். இவருக்கும், சிவம் என்ற வாலிபருக்கும் கடந்த 2025 செப்டம்பர் மாதம் ‘டேட்டிங் ஆப்’ மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் நெருக்கமாக மாறவே, இருவரும் கடந்த சில நாட்களாக ஒரே வீட்டில் (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) வசித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, இருவருக்கும் இடையே திருமணத் திட்டம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவம், அந்தப் பெண்ணின் அந்தரங்க பாகங்களில் சானிடைசரை ஊற்றி கொடூரமான முறையில் தீ வைத்துள்ளார்.
அத்துடன் நிற்காமல், மெட்டல் பாட்டிலால் பெண்ணின் தலையில் தாக்கியும், கத்தியால் குத்தியும் சித்ரவதை செய்துள்ளார். இந்தத் தாக்குதல் மற்றும் சித்ரவதை சுமார் மூன்று நாட்களாகத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், திருமண ஆசை காட்டி அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் டெல்லியில் உள்ள ஒரே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அப்பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தன் மகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக அந்த வாலிபர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென அந்தப் பெண்ணின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
