பெங்களூருவில் நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரை  காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் பீகாரைச் சேர்ந்த தையல்காரர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கும், ஜஹாங்கீர் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. ஜஹாங்கீர் அந்தத் தையல்காரருக்குத் தொழில் ரீதியாக உதவி செய்து வந்ததால், இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு, தையல்காரர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜஹாங்கீர் அவரது மனைவியை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்தச் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜஹாங்கீர், அந்தப் பெண்ணைத் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்தப் பெண் குழந்தைகளுடன் பீகாருக்குச் சென்றிருந்தார். கடந்த 10-ஆம் தேதி மீண்டும் பெங்களூரு திரும்பியதை அறிந்த ஜஹாங்கீர், மீண்டும் அந்தப் பெண்ணைத் தவறான உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவே, “உல்லாசத்திற்கு வரவில்லையென்றால் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்; இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்,  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஜஹாங்கீர் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆபாச வீடியோ எடுத்துத் துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.