சமையலறையில் நடக்கும் சிறு தவறுகள் சில நேரங்களில் வேடிக்கையாக முடிவதுண்டு. ஆனால், டெல்லியில் ஒரு பணிப்பெண் செய்த காரியம் தற்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது. கடையில் வாங்கிய பிளாஸ்டிக் கவருடன் அப்படியே கோழிக்கறியை (Chicken) குழம்பில் போட்டு சமைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
சௌரவ் தேவராணி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வாணலியில் கொதிக்கும் மசாலா குழம்பிற்குள், பிளாஸ்டிக் உறையால் சுற்றப்பட்ட கோழிக்கறி துண்டு அப்படியே கிடக்கிறது. இது குறித்து அவர் கூறுகையில், “வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த உறைந்த கோழிக்கறியை எடுத்து சமைக்கும்படி பணிப்பெண்ணிடம் கூறினேன். ஆனால், அந்த பிளாஸ்டிக் கவரைப் பிரித்துவிட்டு சமைக்க வேண்டும் என்று யாரும் அவருக்குச் சொல்லவில்லை போலிருக்கிறது. இப்போது நான் அவரிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை” எனப் புலம்பியுள்ளார்.
View this post on Instagram
மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான நகைச்சுவை கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இவர் என்ன ‘ சீரியல் கதாபாத்திரம் பாணியில் சமைக்கிறாரே!” என ஒருவர் கிண்டலடித்துள்ளார். இன்னொருவரோ, “இந்த முறை எப்படியோ சாப்பிட்டுவிடுங்கள், அடுத்த முறை கவரை மட்டும் குழம்பில் போட்டுவிட்டு கறியை வெளியே வைக்கச் சொல்லுங்கள்” என நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.
