தாய்மை என்பது அன்பின் வடிவம் மட்டுமல்ல, அது ஒரு பெரும் போராட்டத்தின் அடையாளம் என்பதையும் ஒரு வைரல் வீடியோ நிரூபித்துள்ளது. கிராமப்புறப் பெண் ஒருவர் தனது தலையில் சுமக்கும் புல் கட்டோடு, தனது பச்சிளம் குழந்தையையும் சேர்த்துக்கட்டிச் செல்லும் காட்சி காண்போர் கண்களைக் குளமாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் வயல்வெளிகளின் வழியாக நடந்து செல்கிறார். அவரது தலையில் கால்நடைகளுக்கான தீவனமான புல் கட்டு கனமாக இருக்கிறது. இதில் அனைவரையும் உறைந்து போகச் செய்த விஷயம் என்னவென்றால், அந்தப் புல் கட்டின் நடுவே அவரது சிறிய குழந்தை பத்திரமாகத் துணியால் கட்டப்பட்டுள்ளது.
View this post on Instagram
தாய் புல் கட்டைச் சுமந்து செல்ல, அக்குழந்தை அந்தச் சுமையின் ஒரு பகுதியாகவே மாறி அமைதியாகப் பயணிக்கிறது. அந்தப் பெண்ணுடன் மற்றொரு சிறுவனும் நடந்து செல்கிறான். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்குச் சிலருக்கு அதிர்ச்சியாகத் தெரிந்தாலும், இது ஒரு தாயின் அலட்சியம் அல்ல; மாறாக, பிழைப்புக்காகப் போராடும் ஒரு ஏழைத் தாயின் தவிர்க்க முடியாத சூழல் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களது குழந்தைகளைப் பராமரிக்க ஆள் இல்லாத நிலையில், வாழ்வாதாரத்தையும் பிள்ளைப் பாசத்தையும் ஒருசேரக் கையாள வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தின் ஒரு நிதர்சனமான சாட்சியாகவே இந்த வீடியோ பார்க்கப்படுகிறது.
மேலும் தாய்மையின் வலிமைக்கு இதுவே சாட்சி” என ஒரு தரப்பினர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வரும் வேளையில், “அடிப்படை வசதிகள் இல்லாத கிராமப்புற ஏழைப் பெண்களின் நிலை என்று மாறுமோ?” என்ற ஆதங்கத்தையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பலரது இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது.
