மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெடித்த இனக்கலவரத்தின் போது கும்பலால் தாக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.எல்.ஏ. வுங்சாகின் வால்டே (61) நேற்று (பிப்ரவரி 21) காலமானார்.

மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி – குக்கி  இனத்தவர்களிடையே பெரும் வன்முறை வெடித்தது. அப்போது தலைநகர் இம்பாலில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வுங்சாகின் வால்டே மற்றும் அவரது ஓட்டுநர் மீது போராட்டக்காரர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார்.

தாக்குதலுக்குப் பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் வீடு திரும்பினார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.