உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாடகை வீட்டில் வசித்து வந்த வெல்டிங் தொழிலாளி சத்யவீர் சிங் (50), அவரது மனைவி ஷீலா (48) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் என மொத்தம் ஐந்து பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

சனிக்கிழமையன்று வேலை நிமித்தமாக சத்யவீரின் கடைக்கு வந்த நபர், கடை மற்றும் வீடு நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது இந்தத் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு சத்யவீர் மற்றும் அவரது மனைவி தூக்கிட்ட நிலையிலும், 12, 10 மற்றும் 8 வயதுடைய அவர்களது மூன்று குழந்தைகள் படுக்கையில் சடலங்களாகவும் கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் மற்றும் போலீசார் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த மூன்று நாட்களாக வீடு பூட்டப்பட்டிருந்ததால், மூன்று நாட்களுக்கு முன்பே இந்த விபரீதம் நடந்திருக்கலாம் என்று டிஐஜி பிரபாகர் சவுத்ரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சத்யவீர் வெல்டிங் கடை நடத்தி வந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாகக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தம்பதியினர் தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சொத்துப் பங்கீடு தொடர்பாகத் தனது கணவருக்கு அவரது குடும்பத்தினருடன் இருந்த மனக்கசப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான உண்மைகள் தெரியவரும் என்று கூறியுள்ள காவல்துறையினர், வழக்கின் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.