பிரபல பாலிவுட் நடிகை தீஷா பதானியின் சகோதரியும், முன்னாள் இந்திய ராணுவ மேஜராக பணியாற்றியவருமான குஷ்பூ பதானி, தற்போது உடல்நல பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர், சமீபத்தில் ஆன்மீக சொற்பொழிவாளரும் மத குருவுமான அனிருத்தாச்சாரியா பேசிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனிருத்தாச்சாரியா, லிவ்-இன் முறையை விமர்சிக்கும் விதத்தில் பெண்களை குறிவைத்து இழிவாக பேசியதாக குற்றம்சாட்டிய குஷ்பூ பதானி, “இவரைப் போன்ற நபர்கள் நாட்டிற்கே எதிரானவர்கள். இரண்டு குடும்பங்களை திருமணத்தால் பாதிப்பதைவிட, லிவ்-இன் முறையில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் பெண்களை மட்டும் குறை கூற வேண்டும்?” என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பலரும் குஷ்பூவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதேவேளை, ஆன்மீக குரு பிரேமானந்த் மகாராஜ் இந்த விவகாரத்தில் பதிலளித்தார். “சாக்கடையில் கிடக்கும் புழுவை அமிர்த கலசத்தில் போட்டாலும் அதற்குப் பிடிக்காது. அதுபோல், முட்டாள்களுக்கு நல்ல அறிவுரை கூறினால் அவர்கள் ஏற்கமாட்டார்கள். நாங்கள் மக்களின் நல்வாழ்வுக்காகவே பேசுகிறோம். சில சமயம் கடுமையாக பேச வேண்டியிருக்கும்,” எனக் கூறினார். இது சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் குஷ்பூவின் ஆதிக்கமான கருத்தை எதிர்த்து, ஆன்மீக குருவின் கருத்தை ஆதரித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
