தெலுங்கானா மாநிலம் கரீம்நகர், ராமதுருவைச் சேர்ந்தவர் நரேஷ் (30). இவருடைய அண்ணன் வெங்கடேஷ் (37) மனநலம் பாதிக்கப்பட்டவர்; இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நரேஷ் மாதத் தவணையில் இரண்டு லாரிகள் வாங்கி தொழில் தொடங்கி நடத்தி வந்த நிலையில், அதில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளில் ஏற்பட்ட பெரிய இழப்பு காரணமாகக் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்.

தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கித் தவணையைச் செலுத்தி வந்ததால், நரேஷுக்கு சுமார் ரூ.1.50 கோடி கடன் சுமை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு நெருக்கடி கொடுத்ததால், தவித்த நரேஷ் கடனை அடைக்க ஒரு கொடூரமான முடிவை எடுத்தார்; அது, தன் அண்ணன் வெங்கடேஷைக் கொலை செய்வதுதான்.

தனது திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, நரேஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐந்து காப்பீட்டு நிறுவனங்களில் (4 தனியார், 1 அரசு) தனது அண்ணன் வெங்கடேஷ் பெயரில் தனித்தனியாக ரூ.4.14 கோடிக்குக் காப்பீடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, தனக்கு ரூ.7 லட்சம் தர வேண்டிய ராகேஷ் என்பவரை அணுகிய நரேஷ், அண்ணன் கொலையில் ஒத்துழைத்தால், ராகேஷின் கடன் தொகையுடன் கூடுதலாக ரூ.13 லட்சம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதேபோல், தன்னிடம் வேலை செய்யும் லாரி டிரைவர் பிரதீப்பை அணுகி, அவருக்கு ரூ.2 லட்சம் தருவதாகவும் ஒப்பந்தம் செய்து, கொடூரமான சதி வலையைப் பின்னினார்.

சதித் திட்டத்தின்படி, கடந்த 29-ஆம் தேதி லாரி டிரைவர் பிரதீப், லாரி புறநகரில் இருப்பதாக நரேஷுக்குத் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, நரேஷ் தனது அண்ணன் வெங்கடேஷை பைக்கில் லாரி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, வெங்கடேஷை லாரி சக்கரத்தின் அடியில் படுக்க வைத்து, லாரியை முன்னோக்கி இயக்கச் செய்தனர். லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மறுநாள் காலை, லாரி மோதி அண்ணன் இறந்து விட்டதாக நரேஷ் நாடகமாடி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று காப்பீட்டு நிறுவனப் பிரதிநிதிகள் நரேஷிடம் விபத்து குறித்துக் கேட்டபோது, அவர் அளித்த சந்தேகத்திற்குரிய பதில்கள் காரணமாக அவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் நரேஷை பிடித்து விசாரித்ததில், அவர் கொலையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நரேஷ், ராகேஷ் மற்றும் லாரி டிரைவர் பிரதீப் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.