திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன் ராஜாவிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜா கணேசனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணேசனை கையும், களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கணேசனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.