அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு வயது சிறுவன் ஒருவனின் சுட்டித்தனமான செயல்களும், அவனது மீண்டெழுந்த வாழ்க்கைக் கதையும் அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்துள்ளது.
அமெரிக்காவில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கும் அரசின் திட்டங்களைக் கொண்டாடும் வகையில் வெள்ளை மாளிகையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிபர் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சியரா ஸ்மித் என்ற பெண்ணின் மடியில் இருந்த இரண்டு வயது சிறுவன் டிராவிஸ் ஸ்மித், திடீரென தரையில் இறங்கி விளையாடத் தொடங்கினான். அங்கிருந்த தரைவிரிப்பில் உருண்டோடியும், குப்புறப் படுத்துக் கொண்டும் அவன் செய்த மழலைச் சேட்டைகள் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அனைவரையும் சிரிக்க வைத்தது.
அந்தச் சிறுவனின் சுறுசுறுப்பைக் கண்ட அதிபர் டிரம்ப், அவனது தாயிடம் நலம் விசாரித்தார். அப்போது சியரா ஸ்மித் கூறிய தகவல் அனைவரையும் நெகிழ வைத்தது. சிறுவன் டிராவிஸ் பிறக்கும்போதே 100 சதவீதம் செவித்திறன் அற்றவனாகப் பிறந்துள்ளான். ‘OTOF’ எனும் அரிதான மரபணு மாற்றத்தால் அவனால் எதையுமே கேட்க முடியாது. “ஐ லவ் யூ” என்று தாய் சொன்னால் கூட அவனுக்குக் கேட்காது. தனது பெயரைச் சொன்னால் கூட அவனால் திரும்பப் பார்க்க முடியாது.
சிறுவனுக்கு 18 மாதங்கள் ஆனபோது, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட ‘ஜீன் தெரபி’ (Gene Therapy) சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதன் பலனாக, 100 சதவீதம் கேட்கும் திறனை இழந்த டிராவிஸ், இப்போது தனது தாயின் குரலையும் இசையையும் கேட்கும் சக்தியைப் பெற்றுள்ளான்.
இந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்த அதிபர் டிரம்ப், “இது ஒரு அதிசயம். இப்போது அவனால் தனது தாய் சொல்வதை நன்றாகக் கேட்க முடிகிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மருந்து நிறுவனங்கள் விலையைக் குறைக்க அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பயனாக, இது போன்ற சாமானிய மக்களுக்கும் நவீன சிகிச்சைகள் சென்றடைவதை விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
“He didn’t know his name. He couldn’t hear me tell him how much I love him — and now, with @Regeneron, and this amazing surgery, he can listen to music… now he can hear…”@POTUS: “That’s incredible… that’s a beautiful boy.” ❤️ https://t.co/9oWgwHQX0N pic.twitter.com/C7WbftQ3B8
— Rapid Response 47 (@RapidResponse47) April 23, 2026
