பொதுவாக இறுதிச்சடங்கு என்றாலே கண்ணீரும் சோகமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், தாய்லாந்தில் உயிரிழந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம் அரங்கேறியிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் நகோன் சி தாமரத் மாகாணத்தில் உள்ள ஒரு பௌத்த கோவிலில் 59 வயது மதிக்கத்தக்க ஒருவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது, உயிரிழந்தவரின் சவப்பெட்டிக்கு முன்பாக மூன்று நடனக் கலைஞர்கள் (Coyote Dancers) வரவழைக்கப்பட்டு, அதிரடி இசையுடன் நடனமாடினர். துக்க நிகழ்வு நடக்க வேண்டிய இடத்தில் அரங்கேறிய இந்த கிளாமர் நடனம், அங்கு கூடியிருந்தவர்களையும் இணையவாசிகளையும் ஒரு நிமிடம் திகைக்க வைத்தது.


இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். உயிரிழந்த நபர் மிகுந்த கலகலப்பான சுபாவம் கொண்டவர். “நான் இறந்த பிறகு யாரும் அழக்கூடாது; என் வாழ்வை ஒரு கொண்டாட்டமாக நினைத்து வழிஅனுப்ப வேண்டும்” என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்துள்ளது.

https://www.instagram.com/reel/DXeaF06Ec00/?igsh=dHRwMHIxNGcwdmsw

 

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி அவர் காலமான நிலையில், அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றவே குடும்பத்தினர் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர். “மரணம் என்பது வாழ்வின் ஒரு பகுதி, அதை இயல்பாக ஏற்க வேண்டும்” என்பதே அவர் விட்டுச் சென்ற செய்தி என அவரது உறவினர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

இருப்பினும், ஒரு புனிதமான மத வழிபாட்டுத் தலத்திற்குள் இத்தகைய ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியது முறையற்றது என இணையத்தில் ஒரு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்த வினோத விடைபெறுதல் தற்போது உலகளாவிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.