இந்தியாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வரும் ஈனஸ் ஃபாரியா என்ற வெளிநாட்டு பெண் விசித்திரப் பயணி, தான் ரயிலில் பயணித்தபோது சந்தித்த அச்சுறுத்தலான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் பொதுவெளியில் எழுப்பியுள்ளது. ரயிலின் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் (3AC) தனது நண்பருடன் பயணித்தபோது, தனக்கு எதிரே அமர்ந்திருந்த நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட இளைஞர் கும்பல், தன்னைத் தொடர்ந்து அசௌகரியமாக உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு பெட்டியில் உள்ள கழிவறைக்குச் சென்றபோதும், அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் தன்னைத் தொடர்ந்து வந்து, கழிவறைக் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்றதாக ஈனஸ் ஃபாரியா அதிர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
View this post on Instagram
நல்வாய்ப்பாக, அந்த நபர் பின்தொடர்வதைக் கவனித்த அவரது நண்பர், உடனடியாக கழிவறைக்கு வெளியே வந்து நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவர்கள் உடனடியாக ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்தனர். புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட ரயில்வே நிர்வாகம், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உடனடியாக அவர்களை உயர்தர இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கு (2AC) மாற்றி உதவி செய்தது.
தங்களுக்கு உடனடியாக உதவிய ரயில்வே ஊழியர்களுக்கு ஈனஸ் ஃபாரியா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். எனினும், கட்டணம் செலுத்தி பயணிக்கும் ஏசி பெட்டிகளிலேயே பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
