கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போக்குவரத்து காவலரின் இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ ஒன்று தவறுதலாக மோதிய விவகாரத்தில், ஆட்டோ ஓட்டுநரை காவலர் ஒருவர் பொதுமக்களுக்கு முன்னிலையில் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ மோதிய அடுத்த கணமே, அந்த ஓட்டுநர் பயந்துபோய் உடனடியாக ஆட்டோவை நிறுத்திவிட்டு, காவலரிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இருப்பினும், ஆத்திரமடைந்த அந்த போக்குவரத்து காவலர், ஓட்டுநரின் மன்னிப்பை ஏற்க மறுத்து அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆட்டோவிற்குள் இருந்த ஓட்டுநரை வெளியே இழுத்து, அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
View this post on Instagram
இச்சம்பவத்தை அங்கிருந்த பாதசாரி ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோ மிக வேகமாக பரவி, லட்சக்கணக்கான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காவலரின் இந்த அநாகரிகமான மற்றும் அராஜகப் போக்கிற்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் “மக்களைப் பாதுகாப்பதுதான் காவல்துறையின் கடமையே தவிர, பொதுவெளியில் அவர்களை அடித்து அவமானப்படுத்துவது அல்ல” என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர். அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அந்த போக்குவரத்து காவலர் மீது உயர் அதிகாரிகள் உடனடியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
