ஹைதராபாத்தில் 36 வயது மென்பொறியாளர் ஒருவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக 19 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தைச் சேர்ந்த சீதாரம் (36) என்ற மென்பொறியாளர், அங்குள்ள புகழ்பெற்ற உசேன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர், அவர் எழுதி வைத்திருந்த 19 பக்க உருக்கமான தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில் தனது மனைவி ரேணுகா மீது சீதாரம் அடுக்கடுக்கான புகார்களைக் சுமத்தியுள்ளார். அதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது மனைவி மூன்று ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் ஒருவன் தனது மனைவியுடன் இருந்த அந்தரங்கத் தருணங்களைப் படம்பிடித்ததாகவும், அதனை ரமணா என்பவர் இன்ஸ்டாகிராமில் பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த நபர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றது தனக்குத் தெரியாது என்றும், வீடியோக்களை இணையத்தில் பார்த்த பின்னரே தனக்கு உண்மை தெரிந்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மனைவிக்குத் தேவையான அனைத்தையும் செய்து கவனித்துக் கொண்டேன். ஆனால், அவர் செய்த துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அந்த கடிதத்தில் சீதாரம் தனது மனக்குமுறலைக் கொட்டியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சீதாரம் எழுதி வைத்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்தும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
