பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரால் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலியுடன் பயணம் செய்தபோது, ஓட்டுநர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும், இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் தங்களை சேர வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிற்கு முன்னதாகவே பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “ஒருவேளை என் காதலி மட்டும் தனியாக இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என அவர் மிகுந்த ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம், தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.  சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயலிகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யபட வேண்டும்.

இந்த நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நகர்ப்புறங்களில் பைக் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.