தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக விரோத செயல்களை முற்றிலுமாக துடைத்தெறியவும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் போலீஸார் மாநிலம் முழுவதும் மெகா ஆபரேஷன் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 15,349 ரெளடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் தீவிர விசாரணைக்கு ஆளான 3,246 ரெளடிகளில், பழைய குற்றவாளிகள் மற்றும் புதிய ரெளடிகள் என மொத்தம் 844 பேரை பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

ரெளடிகள் வேட்டை ஒருபுறம் இருக்க, போதைப்பொருட்களுக்கு எதிராகவும் போலீஸாரின் சாட்டை சுழன்றுள்ளது. இந்த அதிரடி சோதனையில் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து வெளிச்சந்தையில் சுமார் 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது அமைதியைக் கெடுக்கும் ரெளடிகள் மற்றும் போதை கும்பல்களின் நெட்வொர்க்கை வேரறுக்க இந்த அதிரடி வேட்டை தொடர்ந்து நீடிக்கும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.