கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் தனபால் ஆகிய இருவரும் தங்களுக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாய் கடன் குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு வேலுமணி தான் பணத்தைச் செலுத்திவிட்டதாகக் கூறி அதற்கான ஆதாரங்களைக் காட்ட முயன்றார். ஆனால், ஆத்திரமடைந்த அவர்கள் வேலுமணியைத் தடியால் தாக்கியதுடன், அவரது கழுத்தில் துண்டை போட்டு தெருவில் தரதரவென இழுத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்த வேலுமணி, அன்று மாலையே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊத்தங்கரை மற்றும் கிருஷ்ணகிரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலுமணியின் மனைவி அம்பிகா அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தமிழ்வாணனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
