சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி, மனிதநேயத்தை சுக்குநூறாக உடைத்தெறியும் ஒரு கொடூரமான சம்பவம் குஜராத் மாநிலம் பாட்டன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வெறும் 5,000 ரூபாய் கடனுக்காகவும், தனது இழிவான ஆசைக்கு இணங்காததாலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு இளம் கைம்பெண் உயிரோடு கொளுத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

அதாவது பாட்டன் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான பிங்கிபென் பாட்னி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த அவர், தன் இரண்டு குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வந்தார். வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்த பிங்கிபென், ஒரு மாதத்திற்கு முன்பு தன் அண்டை வீட்டுக்காரரான பாபுபாய் ராவல் என்பவரிடம் 5,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

அந்த 5,000 ரூபாய் தான் அவரது மரண சாசனமாக மாறும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. கடனுக்கான வட்டியைக் கேட்டு பாபுபாய் ராவல் அடிக்கடி பிங்கிபென்னின் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்துள்ளான். பணம் என்ற போர்வையில், அநாதையாக நின்ற ஒரு பெண்ணின் சூழ்நிலையை சாதகமாக்கிக்கொண்டு, அவளிடம் பாலியல் ரீதியாகவும் அத்துமீற முயன்றுள்ளான் அந்த வட்டி அரக்கன். ஆனால், பிங்கிபென் அவனது அசிங்கமான கோரிக்கையை தீர்க்கமாக மறுத்து, தன்மானத்தோடு வாழப் போராடினார்.

கடந்த ஜூலை 12 அன்று, இந்த விவகாரத்தைப் பேசித் தீர்ப்பதாகக் கூறி, பிங்கிபென்னை உள்ளூர்வாசியான ஜீதுபாய் பாஞ்சால் என்பவரது வீட்டுக்கு அருகில் வருமாறு பாபுபாய் அழைத்துள்ளான். தன் தாயுடன் அவளது மகளும் சென்றிருந்தாள். அங்கு நடந்த சம்பவத்தை பிங்கிபென்னின் மகள் கண்ணீருடன் விவரிக்கிறார்.

பாபுபாய் என் அம்மாவிடம் ‘என் 5,000 ரூபாயை இப்போதே கொடு’ என்று மிரட்டினான். என் அம்மா இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். ஆனால் அவன் கேட்கவில்லை. திடீரென அவனது குரல் மாறியது. ‘இங்கேயே நில்லுங்கள், நான் டீ எடுத்துட்டு வர்றேன், ஒண்ணா குடிக்கலாம்’ என்று பாசமாகப் பேசுவது போல் நடித்தான். நாங்கள் அதை நம்பினோம். ஆனால், அவன் டீக்கு பதிலாக பெட்ரோல் பாட்டிலோடு வருவான் என்று எங்களுக்குத் தெரியாது.

பாபுபாய் டீ வாங்கச் சென்ற இடைவெளியில், பிங்கிபென் அங்கிருந்த ஜீதுபாயிடம் தன் சூழ்நிலையை விளக்கிப் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கே அசுர வேகத்தில் வந்த பாபுபாய், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை பிங்கிபென் மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீயைப் பற்றவைத்தான். நெருப்பு பிங்கிபென்னைச் சூழ்ந்து கொண்டது. அலறல் சத்தம் அந்தப் பகுதியையே உலுக்கியது. இந்த வெறிச்செயலின் போது, எதிர்பாராதவிதமாக பாபுபாய் மீதும் தீப்பற்றிக் கொண்டது.

பயங்கரமான தீக்காயங்களுடன் பிங்கிபென் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும், தனது இறுதி வாக்குமூலத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரேஷ் ரேணுகா முன்னிலையில் பிங்கிபென் பதிவு செய்தார்.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக அகமதாபாத்  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனின்றி, அந்தப் போராளித் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குற்றவாளி பாபுபாயும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

வெறும் 5,000 ரூபாய்க்காக ஒரு மனித உயிர் இவ்வளவு மலிவாகப் பறிக்கப்பட வேண்டுமா? அநாதையாக நிற்கும் அந்த இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு? தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றி, டீ வாங்கி வருவதாகக் கூறி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய பாபுபாய் ராவல் போன்ற சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் முன் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. வறுமையும், பெண்மையும் வட்டி அரக்கர்களால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிச் சிதைக்கப்படப் போகிறது?