கால்பந்து உலகம் நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த 2026 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டி, வெறும் ஆட்டமாக மட்டுமல்லாமல் வீரர்களின் உணர்ச்சிப் போராட்டமாகவும் மாறிப்போனது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைக்கத் துடித்த பிரான்ஸ் அணிக்கும், அசைக்க முடியாத பலத்துடன் களம் கண்ட ஸ்பெயின் அணிக்கும் இடையே நடந்த மோதல், இறுதியில் ஒரு அதிர்ச்சிச் சம்பவத்துடன் நிறைவடைந்துள்ளது. பிரான்ஸின் நட்சத்திர ஆட்டக்காரரும் கேப்டனுமான கிலியன் எம்பாப்பே, ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் நிதானத்தை இழந்து ஸ்பெயின் கோல்கீப்பரைத் தாக்கிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போட்டித் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் அணியின் கை ஓங்கியிருந்தது. பிரான்ஸின் தடுப்பாட்டங்களை தவிடுபொடியாக்கி ஸ்பெயின் வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். ஆட்டம் முடியும் தருவாயை நெருங்க நெருங்க, எப்படியாவது கோல் அடித்து அணியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு பிரான்ஸ் வீரர்கள் போராடினர். ஆனால், ஸ்பெயின் அணியின் இரும்பு அரண் போன்ற தடுப்பாட்டத்தை அவர்களால் உடைக்க முடியவில்லை.
Este es el ejemplo de un jugador SUCIO mal intencionado, mal ganador y mal perdedor! pic.twitter.com/WKmbHBsOIG
— 🇵🇾Hugo Biedermann M🇵🇾🇵🇾🇵🇾 (@Hugobie) July 14, 2026
நேரம் கடந்து கொண்டே செல்ல பிரான்ஸ் அணியின் உலகக்கோப்பை கனவு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருப்பதை மைதானத்தில் இருந்த ரசிகர்களால் உணர முடிந்தது. இந்தத் தோல்வி பயமும் ஆத்திரமும்தான் கிலியன் எம்பாப்பேயை எல்லையைக் கடக்க வைத்தது.
போட்டியின் மிக முக்கியமான இறுதி நிமிடங்களில், பந்தைத் துரத்திக் கொண்டு எம்பாப்பே மிக வேகமாக ஓடினார். அப்போது ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் உனாய் சிமோன் பந்தைத் தடுத்து தன் வசப்படுத்த வெளியே வந்தார். பந்தை எப்படியாவது பறிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் எம்பாப்பே, உனாய் சிமோனின் முகத்திலேயே தனது முழங்கையால் பலமாகத் தாக்கினார்.
எம்பாப்பேயின் முழங்கை பட்டதும், உனாய் சிமோன் வலியால் துடித்தபடி மைதானத்தில் சரிந்து விழுந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த வீரர்களுக்கும், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மைதானத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டதைத் தொடர்ந்து, நடுவர் உடனடியாக தலையிட்டு கிலியன் எம்பாப்பேயின் இந்த அநாகரிகமான ஆட்டத்திற்கு ‘மஞ்சள் அட்டை’ காண்பித்துக் கண்டித்தார். எவ்வளவு முயன்றும் பிரான்ஸ் அணியால் கடைசி வரை ஸ்பெயினின் கோட்டையைத் தகர்க்க முடியவில்லை.
இறுதியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி கம்பீரமாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதே நேரத்தில், முந்தைய உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்ற பிரான்ஸ் அணி, இம்முறை அரையிறுதியோடு கண்ணீருடன் விடைபெற்றது. உலகத் தரம் வாய்ந்த ஒரு வீரரான எம்பாப்பே, தோல்வியின் விளிம்பில் தன் நிதானத்தை இழந்து எதிரணி வீரரைத் தாக்கியது, கால்பந்து வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
