ஒரு உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைவது என்பது சாதாரண வலியல்ல. அதுவும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து உலகை ஆள நினைத்த ஒரு அணிக்கு, இந்தத் தோல்வி ஒரு தீராத வடு. உலக கோப்பையில் அரையிறுதியில்  ஸ்பெயினிடம் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் மண்டியிட்டபோது, ஒட்டுமொத்த தேசத்தின் பாரமும் அதன் 27 வயது இளங்கம்பீர கேப்டன் கைலியன் எம்பாப்பேயின் தோள்களில் இறங்கியது.

செய்தியாளர் சந்திப்பில், தோல்வியின் ரணத்தோடும் ஆனால் ஒரு தலைவனுக்கே உரிய கம்பீரத்தோடும் எம்பாப்பே பேசிய வார்த்தைகள், கால்பந்து ரசிகர்களின் நெஞ்சை உருக  செய்துள்ளன. தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி, 16 கோல்கள் என அசுர பலத்துடன் களமிறங்கிய பிரான்ஸ், மைதானத்தில் ஸ்பெயினின் தாளத்திற்கு ஆட வேண்டியதாயிற்று. தோல்விக்கான காரணங்களை கேப்டனாகப் போட்டு உடைத்தார் எம்பாப்பே.

அதாவது ஆடுகளத்தில் நாங்கள் இரண்டு பேர், அவர்கள் மூன்று பேராக இருந்தோம். ஸ்பெயினுக்கு எதிராக இப்படி விளையாடுவது மரணத்தைத் தழுவுவதற்குச் சமம். ஃபாபியன் ரூயிஸும், ரோத்ரியும் பந்தைக் கடத்த நாங்கள் தாராளமாக நேரம் கொடுத்துவிட்டோம். எங்கள் பிரெஸிங் முறையில் ஒருங்கிணைப்பு இல்லை. நாங்கள் ஆளுக்காள் பிடித்து விளையாடி அவர்களை ஓட வைத்திருக்க வேண்டும்.

“தொழில்நுட்ப ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் நாங்கள் நினைத்த ஆட்டத்தை ஆடவில்லை. ஒரு உலகக்கோப்பை அரையிறுதியில் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறினால், உங்களால் ஜெயிக்க முடியாது” என்று நிதர்சனத்தைச் சாடினார் எம்பாப்பே. ஆட்டம் தொடங்கிய 22-வது நிமிடத்திலேயே லமின் யமால் வென்றுகொடுத்த பெனால்டி வாய்ப்பை, ஸ்பெயினின் ஓயார்சபல் கோலாக மாற்றியபோதே பிரான்ஸின் தடுமாற்றம் தொடங்கியது. பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் அதிர்ச்சியில் உறைந்த தருணம், முதல் பாதியிலேயே நட்சத்திர டிஃபெண்டர் வில்லியம் சலிபா  காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறியதுதான்.

இரண்டாவது பாதியில் மனு கோனே, டெசையர் டூவே, ராயன் செர்கி எனப் புதிய இளம் ரத்தத்தைப் பாய்ச்சியும் பிரான்ஸால் மீள முடியவில்லை. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தைக் கடந்தபோது, பெட்ரோ போரோ அடித்த இரண்டாவது கோல் பிரான்சை வீழ்த்தியது.

தொடரில் 8 கோல்களுடன் கோல்டன் பூட் விருதுக்கான பந்தயத்தில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியுடன் சமநிலையில் இருக்கும் எம்பாப்பே, இந்த அரையிறுதியில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஸ்பெயினின் அசைக்க முடியாத தற்காப்பு அரண் அவரது கனவுகளை முடக்கியது. இருப்பினும், தோல்வியின் முழுப் பழியையும் தன் மீதே ஏற்றுக்கொண்டார் எம்பாப்பே: இந்த அணியின் கேப்டனாக, அத்தனை பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இறுதிப்போட்டிக்குச் செல்ல ஆசைப்பட்டோம்… ஆனால் போகவில்லை. அவ்வளவுதான் என்றார்.

ஸ்பெயின் அணி தங்களின் இரண்டாவது உலகக்கோப்பை கனவை நோக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட, பிரான்ஸ் அணியோ சனிக்கிழமை நடக்கவிருக்கும் மூன்றாவது இடத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் அர்ஜென்டினா அல்லது இங்கிலாந்துடன் மோதக் காத்திருக்கிறது. சிகரத்தைத் தொடத் துடித்த ஒரு சிங்கத்தின் கனவு அரையிறுதியில் சரிந்திருந்தாலும், தோல்வியைத் தன் தோளில் சுமக்கும் எம்பாப்பேயின் இந்த நேர்மை, அவரை ஒரு சிறந்த வீரராக மட்டுமல்ல, ஒரு உன்னதமான தலைவனாகவும் உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.