ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 258 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கிறது. கிரிக்கெட் உலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரோஹித் சர்மாவும் (11 ரன்கள்), விராட் கோலியும் (5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தருணம் அது. இந்திய அணி தத்தளித்த வேளையில், புதிய இளம் கேப்டன் சுப்மன் கில்லும், ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்து இந்திய அணியின் இன்னிங்ஸை லாவகமாக மீட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மைதானத்தில் இப்படி ஒரு பதற்றமான ஆட்டம் போய்க்கொண்டிருக்கும் வேளையில், மைதானத்திற்கு வெளியே சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மாவின் ஒரு குட்டி வீடியோ காட்டுத்தீயாய் பரவி, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சிப் பணியாளர்கள் அனைவரும் சொகுசுப் பேருந்திலிருந்து இறங்கி மைதானத்திற்குள் நுழையும் சம்பவம்தான் அது. ஒவ்வொரு வீரரும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உலகத்தரம் வாய்ந்த பிராண்டட் ஷூக்களை அணிந்து, ஒரு கையில் காபி கோப்பை, மறு கையில் அதிநவீன பேட் என படு ஸ்டைலாக, கம்பீரமாக டிரஸ்ஸிங் ரூமை நோக்கி நடந்து செல்கிறார்கள். ஸ்டைலுக்கும் நாகரீகத்திற்கும் பஞ்சமில்லாத அந்த ஆடம்பரமான கூட்டத்தின் நடுவே, ஒரு மனிதர் மட்டும் தனித்துத் தெரிந்தார்.

அவர்தான் ரோஹித் சர்மா. எந்தவித பந்தாவும் இல்லாமல், மிகச் சாதாரணமான ஒரு வீட்டுச் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு, எவ்வித ஆடம்பரமும் இன்றி எதார்த்தமாக மைதானத்திற்குள் நுழைந்தார். விளையாட்டில் ரன்கள் அடிக்கிறாரோ இல்லையோ, களம் தாண்டிய அவரது இந்த எளிய குணம் தான் அவரை ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாற்றியிருக்கிறது. “கோடி கோடியாய் பணம் இருந்தாலும், உலகமே உற்றுப் பார்க்கும் ஒரு சர்வதேச மைதானத்திற்குள் இவ்வளவு சாதாரணமாக, ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதரைப் போலச் செருப்பு அணிந்து வர ரோஹித் சர்மாவால் மட்டும்தான் முடியும்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருகி வருகிறார்கள். மேலும் அதே நேரத்தில் ரோகித் சர்மாவிற்கு மறக்கும் பழக்கம் அதிக அளவில் இருப்பதால் அவர் ஷூ போட மறந்து செருப்பு போட்டுக் கொண்டு வந்து விட்டதாகவும் சிலர் கூறுவது குறிப்பிடத்தக்கது.