உத்தரபிரதேசத்தின் கண்ணோஜ் மாவட்டத்தில் உள்ள சௌரிக் என்ற பகுதியில்  அரசுப் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் அன்பையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, அந்தப் புனிதமான வகுப்பறையைத் தங்களின் அந்தரங்கப் பரிமாற்றங்களுக்கான இடமாக மாற்றிக்கொண்ட அவலம், இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு காட்டுத்தீயைப் போலப் பரவிக் கிடக்கிறது.

திடீரென சமூக வலைத்தளங்களில் கசிந்த அந்தச் சிறு வீடியோ, ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் உலுக்கியது. பள்ளி வகுப்பறையின் மூலை ஒன்றில், ஒரு ஆண் ஆசிரியரும் பெண் ஆசிரியையும் தங்களின் தனிப்பட்ட எல்லைகளைக் கடந்து நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தன.

எத்தனையோ ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிரும் என்ற நம்பிக்கையோடு அனுப்பும் அந்தப் பள்ளி, சில நிமிடப் பலவீனத்தால் தன் மாண்பை இழந்து நின்றதை யாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த வீடியோ பரவத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அப்பகுதி முழுக்க அதிர்ச்சியும் ஆத்திரமும் அலைமோதியது.

ஆனால், இந்த வைரல் வீடியோவிற்குப் பின்னால், வெறும் ஒழுக்கக் குறைபாடு மட்டுமல்ல… ஒரு பெண்ணின் தீராத கண்ணீரும், துரோகத்தின் வலியும் கலந்திருப்பதாகச் சொல்லப்படும் தகவல், வாசிப்பவர்களின் நெஞ்சை இன்னும் கனக்கச் செய்கிறது. விசாரணையில் வெளிவந்த தகவல்களின்படி, இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது வேறு யாரும் அல்ல; அந்த ஆண் ஆசிரியரின் சொந்த மனைவிதான் என்று கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் தம்பதியிடையே ஒரு தீராத குடும்பப் போர் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வாழ்க்கை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி, குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

நம்பிக்கைத் துரோகத்தின் உச்சக்கட்ட வலியால் தவித்த அந்த மனைவி, தன் கணவனின் முகத்திரையைக் கிழிக்க, கடந்த காலத்தில் அவர் பள்ளி வளாகத்தில் செய்த இந்தத் தவறான செயலின் ரகசியப் பதிவை இப்போது பொதுவெளியில் வீசியெறிந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது அல்ல, பல காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு பழைய பதிவு என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எப்போது எடுக்கப்பட்டது? யாரால் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டது? என்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னும் மர்மமாகவே நீடிக்கின்றன. காலங்கள் கடந்திருந்தாலும், தவறு நடந்த இடம் ஒரு பள்ளிக்கூடம் என்பதால், அதன் தீவிரத்தைக் காலம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இந்தச் செய்தி பரவிய உடனே, பள்ளி நிர்வாகம் விழித்துக் கொண்டது. பள்ளித் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆண் ஆசிரியருக்கு உடனடியாக விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் மாவட்டத்தின் உயர் கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு முறைப்படி கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில், “விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் விளக்கம் மற்றும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.