ஒரு பெண்ணின் வாழ்வில் மிக உயரிய, மகிழ்ச்சியான தருணம் அவள் தாயாவதுதான். மறுபிறவி எடுத்து ஒரு புதிய உயிரை இந்த உலகிற்கு கொண்டு வரும் அந்தத் தேவதைகள், தங்களின் பிரசவத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்படுவார்கள் என்றால் அதைவிடப் பெரிய கொடுமை இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் முதல் அரங்கேறி வரும் இந்த தொடர் மரணங்கள், ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.
கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை, வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த சில நாட்களிலேயே அடுத்தடுத்து 18 தாய்மார்கள் மரணமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. தங்களின் மழலையின் முகத்தைக் கூட ஒழுங்காகப் பார்க்க முடியாமல் 18 தாய்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், பிரசவம் முடிந்த மேலும் 7 பெண்கள் கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் டயாலிசிஸ் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஒருபக்கம் பச்சிளம் குழந்தைகளின் பசி அழுகை, மறுபக்கம் மனைவிகளை இழந்து தவிக்கும் கணவர்களின் கண்ணீர் என ராஜஸ்தானின் அரசு மருத்துவமனைகள் சோகமயமாகக் காட்சியளிக்கின்றன.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஆளும் பாஜக அரசு இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் அளித்துள்ள விளக்கம், மக்களின் அச்சத்தை போக்காமல் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் இதுகுறித்து பேசுகையில்,
இந்த மரணங்கள் இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் நிகழ்வது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இதற்கான துல்லியமான காரணம் என்னவென்று எங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில், கடுமையான கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என்று நாங்கள் கருதினோம். ஆனால், தற்போது வெயிலின் தாக்கம் முழுமையாகக் குறைந்துவிட்ட நிலையிலும் இந்த பாதிப்புகளும் மரணங்களும் தொடர்கின்றன.” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு மரணம் நிகழும்போது அதற்கான மருத்துவக் காரணங்களை எளிதில் கண்டறிந்துவிடலாம். ஆனால், இங்கு உயிரிழந்த பெண்களின் இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் சீராக உள்ளன. மற்ற மருத்துவக் காரணிகளும் சரியாகவே இருப்பதாகத் தோன்றும் நிலையில், இந்தத் தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள மூலக் காரணம் என்னவென்று தெரியாமல் மருத்துவர்களே திகைத்து நிற்கின்றனர்.
இதன் பின்னணியில் ஏதேனும் மருத்துவ அலட்சியம் அல்லது மருந்துகளின் குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பாதிப்பு ஏற்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
“அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்குச் சென்ற என் மகள் பிணமாகத்தான் திரும்புவாள் என்று தெரிந்திருந்தால் நான் அவளை அனுப்பியிருக்க மாட்டேன்” என்று கதறும் ஒரு தாயின் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
வெப்ப அலை, மர்ம நோய் என்ற காரணங்களுக்குப் பின்னால் ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடும் மருத்துவ அலட்சியம் மறைந்திருக்கிறதா? அல்லது இதுவரை மருத்துவ உலகம் கண்டறியாத ஏதேனும் புதிய தொற்றா? என்ற அச்சத்தில் கர்ப்பிணிப் பெண்களும் அவர்தம் குடும்பத்தினரும் உறைந்து போயுள்ளனர். பிறக்கும் போதே தாயை இழந்த அந்தப் பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? விசாரணைக்குழுவின் அறிக்கை மட்டுமே இதற்கான விடையைச் சொல்ல வேண்டும்.
