மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை ஒன்றில், ஆசிரியைக்கும் கிராம தலைவர் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு‌ தொகுதியில் கிராமத்து அரசுப் பள்ளியில் நீரஜ் குப்தா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கிராமதலைவர் கணவரான புஷ்பேந்திர யாதவ் பள்ளிக்கு வந்து ஆசிரியை நீரஜ் குப்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆசிரியை தன்னை அவர் அடித்ததாகக் கூறி, நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இதற்குப் பின்னணியில் கிராம மக்கள் தரப்பில் வேறு சில புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த ஆசிரியை பெரும்பாலான நாட்களில் பள்ளிக்குச் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு உடனே கிளம்பிவிடுவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மாணவர்களிடமும் பள்ளிப் பொறுப்பாசிரியரிடமும் அவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், இது குறித்து கேட்கச் சென்றபோதே இந்தத் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.