இந்தியாவின் மிகவும் செலவு மிகுந்த நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், வெறும் 500 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு நாள் முழுவதையும் வெற்றிகரமாகக் கழித்து சாதனை படைத்துள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா மண்டல். அதாவது பெங்களூருவில் வசித்து வரும் பிரியங்கா மண்டல், திட்டமிட்ட மேலாண்மை இருந்தால் குறைந்த செலவில் ஒரு நாளைக் கழிக்க முடியுமா என்பதைச் சோதிக்க விரும்பினார். உணவு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தையும் உள்ளடக்கி இந்தச் சவாலை அவர் தொடங்கினார்.
அவரது அன்றைய நாளின் செலவு விபரங்கள் குறித்து பாப்போம். அவர் காலை உணவாக இட்லியுடன் தனது நாளைத் தொடங்கினார். வெளியே செல்லும் போது ஆட்டோ அல்லது வாடகைக் கார்களைத் தவிர்த்துவிட்டு, சிக்கனமான பயணத்திற்காக மெட்ரோவைப் பயன்படுத்தினார். மதிய வேளை உணவு அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. விலையுயர்ந்த ஹோட்டல்களுக்கு மத்தியில் தேடிப் பிடித்து, தனது பட்ஜெட்டுக்குள் ரூ. 120-க்கு உணவருந்தினார். மாலை நேர சிற்றுண்டியா வடை பாவ் மற்றும் டீயுடன் தனது மாலைப் பொழுதைக் கழித்தார்.
நாள் முழுவதும் தனது செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரியங்கா, இறுதியாக ரூ. 500-ல் 200 ரூபாயைச் சேமித்து, வெறும் ரூ. 300-லேயே தனது ஒரு நாள் சவாலை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
பெங்களூருவில் காபி குடிக்கவே பெரும் தொகை செலவாகும் நிலையில், இது ஒரு சிறப்பான முயற்சி” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “இந்தச் சவாலில் மெட்ரோ ரயில் தான் உண்மையான கதாநாயகன்” என மற்றொருவர் போக்குவரத்துச் செலவு குறித்துக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர், “இந்திரா உணவகங்களுக்குச் சென்றால் வெறும் ரூ. 30-ல் உணவருந்த முடியும்” எனப் பல சிக்கனமான யோசனைகளையும் வழங்கி வருகின்றனர். மேலும் பெங்களூரு போன்ற நகரங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், பிரியங்காவின் இந்தத் திட்டமிடல் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
