தெலங்கானா மாநிலத்தில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில், கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பிஞ்சு மகள்களை நீச்சல் குளத்தில் தள்ளிப் படுகொலை செய்த கொடூர கணவனைப் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் புன்னேலா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (29). இவருக்கு ஃபர்ஹத் (26) என்ற மனைவியும், உமேரா (8), ஆயிஷா (6) என இரு மகள்களும் இருந்தனர். தற்போது ஃபர்ஹத் மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு, தனது குடும்பத்தினரை ஒரு நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்ற அசாருதீன், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அணைத்துவிட்டு, மின்சாரத்தையும் துண்டித்துள்ளார். யாரும் பார்க்காத நேரத்தில் மனைவி மற்றும் இரு மகள்களையும் தண்ணீருக்குள் தள்ளி கொலை செய்துள்ளார்.
மறுநாள் காலையில் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், இது தற்செயலாக நடந்த விபத்து என அசாருதீன் நாடகமாடினார். இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததை அறிந்த போலீசார், அசாருதீனைத் தனிப்படை வைத்து விசாரித்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
போலீஸ் விசாரணையில் அசாருதீன் வாக்குமூலமாகத் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன, ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். இதற்கு முன்னதாக இருமுறை தனது மனைவியைக் கட்டாயப்படுத்திச் சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். ஆண் வாரிசைப் பெற்றெடுப்பதற்காக வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவும் அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் பெண் சிசுக்கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அசாருதீனைச் சிறையில் அடைத்தனர். ஆண் வாரிசு மோகத்தால் ஒரு குடும்பமே நிர்மூலமான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
