கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண மலைப் பகுதிகளுக்கு கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார்.
அங்குள்ள மாணிக்கத்தாரா அருவியில் செல்பி எடுத்து மகிழ்ந்தபோது, மாலை நேரத்தில் மாணவி திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து தேடியும் மாணவி கிடைக்காத நிலையில், வெப்பத்தை உணரும் நவீன ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது, சுமார் 2 ஆயிரம் அடி ஆழமுள்ள மலைப் பள்ளத்தாக்கில் மாணவி சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல் மீட்கப்பட்டது.
தனது மகள் தவறி விழவில்லை என்றும், யாரோ அவருக்கு போதை மருந்து கொடுத்து தவறாக நடந்து கொண்டு பள்ளத்தில் தள்ளிவிட்டிருக்கலாம் என்றும் மாணவியின் தாய் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலையோ அல்லது சந்தேகத்திற்கிடமான காயங்களோ இல்லை எனத் தெரியவந்துள்ள நிலையில், செல்பி மோகத்தால் நேர்ந்த விபத்தா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்லும் மக்கள் இது போன்ற ஆபத்தான மலைப் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
