ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் பொல்லினேரி. இவர் கடந்த 3 வருடமாக சென்னை மாவட்டம் ரெட்டேரியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராக இருந்துள்ளார். நவீன் பால் விற்பனையில் வரும் லாபத்தை கணக்கில் காட்டாமல் தன்னுடைய சொந்த கணக்கில் மாற்றிக் கொண்டு ரூபாய் 45 கோடி வரை மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து நிறுவனத்தினருக்கு தெரிய வந்ததால், நவீன் அவர்களிடம் ரூபாய் 5 கோடி திருப்பி கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை விரைவில் தருவதாக கூறியுள்ளார். இருப்பினும் இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் நவீன் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என தன்னுடைய சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து நவீனின் சகோதரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நவீன் பிரிட்டானியா நகரில் தான் புதிதாக வாங்கியிருந்த வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நவீன் சகோதரி அளித்த தகவலின் பெயரில் போலீசார் அவர் வாங்கி இருந்த வீட்டில் தேடிப் பார்த்தபோது அதன் அருகில் உள்ள குடிசையில் நவீன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
இதனைத்தொடர்ந்து நவீனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுவரை திருமணமாகாத நவீன் மோசடி செய்த பணத்தில் 4 கிரவுண்ட் நிலமும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களும் வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
