சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஏழுகிணறு பகுதியில் விலை உயர்ந்த ஓஜி எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி போடப்பட்டது. அப்போது சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ பிரேம்குமார்(32), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ்(34) மற்றும் விம்கோ பகுதியை சேர்ந்த ராஜன்(36) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து உயர் ரக போதைபொருள் விற்பனை செய்து வந்துள்ளனர்.
எனவே மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஸ்ரீ பிரேம்குமார் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இவர் நடிகர் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மூவரிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் பணமும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான 750 கிராம் உயர் ரக போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, மலேசியாவில் உள்ள அஸ்லாம் என்ற நபரிடமிருந்து போதைப் பொருள்களை விற்பனைக்கு வாங்கி அதனை அவர் சொல்லும் நபர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார் என தெரிய வந்தது.
பிரேம்குமாரின் நெருங்கிய நண்பர்கள் சந்தோஷ் மற்றும் ராஜன் ஆகிய இருவரும் கால் சென்டரில் வேலை பார்த்துக்கொண்டும் பிரேம்குமாரிடம் இருந்த போதைப்பொருட்களை சப்ளை செய்தும் வந்துள்ளனர்.
