சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர் தனுஷ், தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இனி பேட்மிண்டன் விளையாட முடியாது என்பதை உணர்ந்த பின்னர், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ், SRM கல்லூரியில் பயோடெக் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்வியில் மட்டுமல்லாமல், மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாதங்களுக்கு முன், தனுஷின் வலது காலில் சிறிய எலும்பில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர் சிகிச்சைக்குப் பிறகும், விரைவில் குணமடையாத நிலையில், மருத்துவர்கள் இனிமேல் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்க முடியாது என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், தனது வாழ்நாளின் கனவாக இருந்த பேட்மிண்டனை விட்டுவிட வேண்டிய நிலை உருவாகி, கடந்த இரண்டு மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம்  வீட்டிலிருந்து வெளியேறிய தனுஷ், ராயபுரம் காசிமேடு கடற்கரையில் உள்ள மேல்டி வால்வு பகுதியில் கடலுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது உடல் கடலில் உள்ள பாறைகளுக்கு இடையே சிக்கி விட்டதாக தகவல் வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர் இணைந்து பிரம்மாண்ட கிரேன் மற்றும் கயிறு மூலம் உடலை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மீட்பு முயற்சி 10 மணி நேரமாகியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடலின் நீரின் வலிமையும், பாறைகளின் இடைவெளியிலும் சிக்கி இருப்பதும் மீட்புப் பணியை சிரமப்படுத்தியுள்ளது. தனுஷின் தற்கொலை செய்தி அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “அவன் வாழ்க்கையே பேட்மிண்டன்… அதில் தொடர முடியாது என்பதே அவனை உடைத்துவிட்டது” என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.