.20,000 கொடுத்தால் பீகாரில் இருந்து பெண் அழைத்து வரலாம்” என்று உத்தரகாண்ட் மாநில அமைச்சரின் கணவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அவருக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ரேகா ஆர்யா (பாஜக). இவருடைய கணவர் கிரிதாரி லால் சாஹு, அந்த மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவராவார். சமீபத்தில் அல்மோராவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிரிதாரி லால், அங்கிருந்த இளைஞர்களிடையே திருமணத்தைப் பற்றி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? கவலைப்படாதீர்கள். உங்களால் பெண் பார்க்க முடியாவிட்டால், நாங்கள் பீகாரில் இருந்து பெண் அழைத்து வருவோம். அங்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 கொடுத்தால் பெண் கிடைக்கும்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கிரிதாரி லாலின் இந்தப் பேச்சுக்கு பீகார் மாநில மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மகளிர் ஆணையத் தலைவி அஸ்பரா கூறுகையில், “அவரது மனைவியே பெண்கள் நலத்துறை அமைச்சராக இருக்கும்போது, அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வன்மையைக் காட்டுகிறது” என்று சாடியுள்ளார். மேலும், இது தொடர்பாக கிரிதாரி லாலுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

கிரிதாரி லாலின் கருத்துக்கு பீகார் மாநில பாஜக-வே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது ஒட்டுமொத்த பீகார் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்” என்று மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாஜக-வின் பெண்களுக்கு எதிரான மனநிலையை இது வெளிச்சம் போட்டு காட்டுவதாக காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சர்ச்சை முற்றிய நிலையில், கிரிதாரி லால் சாஹு தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தான் பெண்களை எப்போதும் மதிப்பவன் என்றும் கூறி மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், ஒரு மாநில அமைச்சரின் கணவரே இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.