உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், ஒரு 38 வயதான மூன்று குழந்தைகளின் தாயான செவிலியர் மீது ஆசிட் வீசிய சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் என்கவுன்டருக்குப் பிறகு வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி, லோஹியா நகர் காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்டவராக ருக்ஸானா என்ற செவிலியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுபற்றி அந்தரிக்ஷ் ஜெயின் என்ற வட்ட மேலதிக காவல் கண்காணிப்பாளர் (SDO) வெளியிட்ட தகவலின்படி, குற்றத்தில் ஒரு மைனர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையில், மகேந்திர பிரஜாபதி என்ற நபர் அவரை தூண்டி விட்டது தெரியவந்தது.

அதாவது மகேந்திர பிரஜாபதி தனது நெருக்கமான ஒரு மைனர் நண்பருக்கு ₹2,000 வழங்கி, ஆசிட் வீசும் நடவடிக்கையை செய்ய தூண்டியதாக போலீசார் கூறினர். சம்பவத்திற்கு பிறகு மைனர் கைது செய்யப்பட்ட நிலையில், மகேந்திரா தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த புதன்கிழமை இரவு, அவர் ஜலால்பூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது, மகேந்திரா தப்பிக்க முயன்று துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலடி நடவடிக்கையில் போலீசார் சுட்டதில் அவர் காலில் காயமடைந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, ஒரு  தோட்டா, ஒரு பயன்படுத்தப்பட்ட ஷெல் மற்றும் குற்றத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இவர்மீது ஆயுதச் சட்டம் மற்றும் ஆசிட் தாக்குதல் சட்டங்களின் கீழ் கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளியான மகேந்திரா, பாதிக்கப்பட்ட ருக்ஸானாவுடன் ஒரு கட்டத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், பின்னர் அவர் தொடர்பை கைவிட்டு அவரிடமிருந்து விலகியதையடுத்து கோபமடைந்து குற்றத்தை திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தற்போது, ருக்ஸானா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீச்சால் அவரது கைகளில் தீவிரக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.