உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூரில், பாஜக தலைவரும் பஞ்சாபி சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பிரவீன் சேதி மீது குரங்குகள் தாக்குதல் நடத்திய சம்பவம், செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம், லக்ஷ்மன் காலி பகுதியில் சந்தையில் இருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென குரங்குகள் ஒரு கூட்டமாக அவர் மீது பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. திடுக்கிட்ட சேதி ஸ்கூட்டரை கைவிட்டு ஓடியும், குரங்குகள் அவரை தொடர்ந்து துரத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் தரையில் விழுந்து காயமடைந்தார்.

 

 

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாக, சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக பிரவீன் சேதி தெரிவித்ததாவது, “இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. கடந்த பல மாதங்களாக ஹபூரில் குரங்குகள் குழுக்களாக சுற்றி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குழந்தைகள் விளையாட முடியாத நிலை, பெண்கள், முதியவர்கள் எல்லோரும் அச்சத்தில் வாழ்கின்றனர். எத்தனையோ முறை புகார் கொடுத்தும் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்று கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.