ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாலிபாலில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஒரு தந்தை தனது 17 வயது மகளின் உடலை தள்ளுவண்டி ரிக்ஷாவில் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுமந்து செல்வதற்கும், பின்னர் பிரேத பரிசோதனை முடிந்த பின் மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்வதற்கும் கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியூலா கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி மது பிந்தானியின் மகள் ஆஷா பிந்தானி மனநலக்குறைவால் பாதிக்கப்பட்டவர். வியாழக்கிழமை பிற்பகல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உடனே தகவல் அறிந்த மது, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது மகளின் உடலை பார்த்தார். பின்னர் வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள பாலிபால் சமூக சுகாதார மையத்துக்கு (CHC) எடுத்துச் செல்லச் சொன்னார்கள்.

மது, அருகிலுள்ள ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டார். ஆனால், ஒரு தனியார் ஆம்புலன்ஸ் 1200 ரூபாய் பணம் கேட்டதாகவும், அரசு 108 சேவை இறந்தவர்களை எடுத்துச் செல்லாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பணமின்றி தவித்த மது, உள்ளூர் மக்களிடம் உதவி கேட்டார். எந்த உதவியும் கிடைக்காததால், இறுதியில் ஒரு தள்ளுவண்டி ரிக்‌ஷாவை ஒருவர் கொடுத்து உதவி செய்தார்.

அந்த ரிக்‌ஷாவில் தனது மகளின் உடலை மது சுமந்து சென்று, பிரேத பரிசோதனை செய்தபின் மீண்டும் அதே வண்டியில் தியூலா கிராமத்திற்கு திரும்பி, இறுதிச் சடங்குகளை நடத்தியது, இந்தக் காலத்தில் கூட ஏழைகள் சந்திக்கும் மனிதநேயமற்ற சூழ்நிலையை வெளிக்கொணர்கிறது.

சம்பவம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வைரலான நிலையில், அதிகாரிகள் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் இருப்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.